புளியரை சோதனை சாவடியில் ரூ.100 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
- சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் காய்கறி, வைக்கோல், கனிமவளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றன. இதனை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்(வயது 55) என்பவர் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரி டிரைவர் ரூ.100 லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் ஜேம்ஸ் கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ்காரர் ஒருவருக்கு போன் செய்து, வைக்கோல் லாரியின் பதிவெண்ணை சொல்லி, அந்த லாரிக்கு அதிக பாரம் ஏற்றியதாக வழக்கு போட்டு அபராதம் விதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சை நேற்று இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். இந்நிலையில் இன்று ஜேம்சை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறுகையில், வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் அவர் லஞ்சம் கேட்பது தொடர்பாக வீடியோ வந்துள்ளது. அதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளேன். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். இவர் தற்போது ஆய்குடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.