தூத்துக்குடியில் வாட்ஸ்-அப்பில் 'லிங்க்' அனுப்பி ரூ.11¾ லட்சம் மோசடி: வாலிபர் கைது
- புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
- ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).
இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.
பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.