பொன்னேரி நகராட்சி பகுதியில் தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கட்டணம்
- பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
- கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், ஒட்டல்கள், 10 திருமண மண்டபங்கள்,3 திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 டன்னிற்கு மேல் குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் தரம்பிரித்து சேகரித்து வருகிறது.
இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டப உரிமையாளர்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை வழங்குபவர்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகம் கொண்டவர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை கழிவுகளை வழங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நகராட்சி நிர்வாகத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.