உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.37 கோடி வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

Published On 2024-05-04 03:56 GMT   |   Update On 2024-05-04 03:56 GMT
  • வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • டிரைவர் ஸ்ரீதரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அண்டை நாடான இலங்கை 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளிடையே அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக இலங்கையில் இருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்தப்படுவதும், இங்கிருந்து பீடி இலைகள், மஞ்சள், வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதும் நடந்து வருகிறது. கடத்தலை தடுக்க ராமநாதபுரம் மாவட்டம் கடலோர கடற்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோவிற்கும் மேற்பட்ட தங்க கட்டிகளை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை போலீசார் பெரியபட்டிணம் கடற்கரை ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து அதிலிருந்த நம்பியான் வலசை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் பெட்டி பெட்டியாக 11 லட்சத்து 88 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.37 கோடி ஆகும்.

இலங்கைக்கு கடத்துவதற்காக வேன் மூலம் கடற்கரைக்கு கொண்டு சென்ற போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக கடத்தி செல்லப்படுகிறது? என டிரைவர் ஸ்ரீதரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், மருந்து, மாத்திரைகள் விலை அதிகரித்துள்ளன. வலி நிவாரண மாத்திரைக்கு அங்கு தேவை அதிகமாக உள்ளதால் இங்கிருந்து கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News