உள்ளூர் செய்திகள்

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான பெண் துணை தாசில்தார் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-10-13 10:11 GMT   |   Update On 2023-10-13 10:11 GMT
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
  • தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

நாகர்கோவில்:

இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.

பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

Tags:    

Similar News