உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2024-10-29 09:40 GMT   |   Update On 2024-10-29 09:40 GMT
  • அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
  • ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

நெல்லை:

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை படு ஜோராக நடந்தது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது.

இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர் மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் தேனி, மதுரை மற்றும் கேரளா வியாபாரிகளும் வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என இருவகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், இறைச்சிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர். ஆட்டின் உயரம், எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று சுமார் ரூ.3 கோடி வரை விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News