கடையநல்லூரில் வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை
- மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். ரமலான் நோன்பை முன்னிட்டு நேற்று இரவு காஜாமைதீன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்காக சென்றார்.
பின்னர் தொழுகை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பீரோவில் 2 பெட்டிகளில் நகைகள் வைத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்ற நிலையில் மற்றொரு பெட்டியில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் விட்டு சென்றிருந்தனர். இது குறித்து காஜாமைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன வீடு அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.