உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நெல்லை அரசு அதிகாரி அறையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்: 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Published On 2023-11-09 10:17 GMT   |   Update On 2023-11-09 10:17 GMT
  • உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கி உள்ள பாளை என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள ஒரு விடுதியில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
  • சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் (வயது55) பணியாற்றி வருகிறார்.

இவர் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடாக அதிக பணம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது உதவி செயற்பொறியாளர் கவுதமன், இளநிலை வரைவு அலுவலர் தச்சநல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), கார் டிரைவர் வள்ளியூரை சேர்ந்த இசக்கி (36) ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800 மற்றும் அங்கிருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது.

இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கி உள்ள பாளை என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள ஒரு விடுதியில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News