வேலை வாங்கி தருவதாக ரூ. 8.25 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க.பிரமுகர் கைது
- ஏமாற்றம் அடைந்த ரேவதி மோசடி குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினார்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 47) அ.தி.மு.க.வில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.
இவர் ரங்காபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சக்திவேலன் மனைவி ரேவதி என்பவரிடம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் கேட்டுள்ளார். அதன்படி ரேவதி சுகுமாரிடம் பணம் கொடுத்தார்.
ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சுகுமார் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்தார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரேவதி இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.
இதில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் சுகுமாரை கைது செய்தனர்.
மோசடி வழக்கில் அ.தி.மு.க பிரமுகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகுமார் ஏற்கனவே பணத்தகராறில் தலைமறைவாக இருந்தார். அப்போது தற்கொலை செய்யப்போவதாக அவர் செல்போனில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.