தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் போராட்டம்
- குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தக்கலை:
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.