கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்
- 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் இருந்தபடி மீனவர்கள் கடலில் மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் நேவிஸ் தவறி கடலுக்குள் விழுந்தார்.
அவரை உடனடியாக சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று தீவிரமாக தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவரை தேடும் பணியில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.