உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு கடத்த பதுக்கிய 43 கிலோ ஏலக்காய் பறிமுதல்

Published On 2024-01-30 06:31 GMT   |   Update On 2024-01-30 06:31 GMT
  • அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டபம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள் மற்றும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தபோதிலும் சட்டவிரோத கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய கடற்படை லெப்டினன்ட் கர்னல் விஜய்குமார் நர்வால் தலைமையில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சுமார் 20 கிலோ எடை கொண்ட இரண்டு பிளாஸ்டிக் மூட்டைகள் மற்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு பிளாஸ்டிக் மூட்டையையும் கொண்டு சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது மூட்டைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த டிராவல் பேக்கையும் அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் சுமார் 45 கிலோ ஏலக்காய் இருந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி அவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், டிராவல் பேக்கை பரிசோதனை செய்த போது அதில் திருவள்ளுர் காரம்பாக்கம் பொன்னிநகர் சி.வி.கே. தெருவை சேர்ந் ஜான்சன் மகன் மார்ட்டின் (40) என்பவரது முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் ஆடைகள் மற்றும் இலங்கை பணம் 1,500 இருந்தது.

இதுகுறித்து மண்டபம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News