சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் கழிவுநீர் கொட்டும் அவலம்
- நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் கசிவு காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது.
- கடந்த மூன்று மாதங்களாக குளியலறையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.
சென்னை:
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம் 56 ஆண்டுகள் பழமையானது. இங்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.
இந்தநிலையில் நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் கசிவு காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது. சுவர்களில் ஈரம் படர்ந்து காணப்படுகிறது.
அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் தரையில் செல்கிறது. மேற்கூரையில் இருந்து கழிவுநீர் கசிந்து தரையில் விழுகிறது. கடந்த மூன்று மாதங்களாக குளியலறையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.
இதனால் தரையில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மேலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க வாளிகளை வைத்துள்ளார்கள். கழிவு நீர் காரணமாக பல புத்தகங்கள் தண்ணீரில் நனைந்துள்ளன. இதனால் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பில் கூறும் போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்த நிலத்தடி கட்டுமானப் பணியின் போது முதல் மற்றும் 2-வது மாடியில் உள்ள குளியலறைகள் மூடப்பட்டன.
தற்போது குளியலறைகளில் இருந்து கழிவு நீர் கசிவதில் புத்தகங்கள் சேத மடைவதோடு மட்டு மல்லாமல், கட்டிடத்தின் கட்டமைப்பையும் பாதிக்கலாம். நூலகத்தை சீரமைக்க ரூ.37 லட்சத்துக்கு அரசிடம் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது. பணியை தொடங்குவதற்கு அனுமதிக்க காத்திருக்கிறோம்" என்றனர்.
மெட்ரோ பணி முடிந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என நூலக ஊழியர்கள் தெரிவித்து வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
பொது நூலக இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, நூலகத்தை புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.