உள்ளூர் செய்திகள்

சொத்து பிரச்சனையில் செயற்கை கட்டை காலால் தாயை அடித்துக் கொன்ற மகன்

Published On 2023-08-03 05:02 GMT   |   Update On 2023-08-03 05:02 GMT
  • சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது மகன் இளங்கோவன் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் ரெயில் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு மரத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் மது போதைக்கும் அடிமையானார். இதனால் அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் ராணியின் பெயரில் உள்ள 1, 822 சதுர அடி காலி வீட்டு மனையை உறவினர் ஒருவருக்கு விற்று விடலாம் என இளங்கோவன், ராணியிடம் கூறினார். அப்போது ராணி கையெழுத்திட மாட்டேன் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் தனது செயற்கை காலை கழற்றி, ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணிக்கு தலை உள்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மண்டையில் பலமான அடி விழுந்ததால் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News