உள்ளூர் செய்திகள்

பாலியல் தொந்தரவு, கருமுட்டை எடுத்ததால் மன உளைச்சல்- தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை

Published On 2022-06-30 04:23 GMT   |   Update On 2022-06-30 04:23 GMT
  • வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஈரோடு:

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த ஜான் உள்பட 4 பேரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் போக்சோ உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து சிறுமியின் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

இதேபோல் உயர்மட்ட மருத்துவ குழுவினரும் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது ஈரோடு ஆர்.என். புதூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

காப்பகத்தில் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் இதுகுறித்து சிறுமி காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இறுதியில் சிறுமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதுவும் அவரது வயிற்றில் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

காப்பகத்தில் இருந்த சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் அவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமி மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தகவல் வெளியானது.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

தற்போது சிறுமி நலமாக உள்ளார். அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அவருக்கு சில கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் சிறுமிக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. அது முடிந்ததும் இன்று மதியம் அல்லது மாலைக்குள் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் காப்பத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்றனர். சிறுமி சிறிதளவே அமிலத்தை குடித்ததால் உயிர் தப்பினார்.

Tags:    

Similar News