சேலம் கொண்டலாம்பட்டியில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர் சஸ்பெண்டு
- பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டியில் அரசு ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜன் சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. உள்பட போட்டி தேர்வுகளுக்கான அகாடமி நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனால் சரியாக பள்ளிக்கு அவர் வராத நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனாலும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. மேலும் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததுடன், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்தாததால் நேற்று நடராஜனை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.