உள்ளூர் செய்திகள்

டெம்போ டிரைவர் கொலை: ஓரின சேர்க்கை விவகாரத்தில் நண்பரே கொன்றது அம்பலம்

Published On 2022-06-11 11:21 GMT   |   Update On 2022-06-11 11:21 GMT
  • போதையில் டெம்போ டிரைவர் என்னிடம் ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்ததாக தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
  • ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்ததால் கல்லால் தாக்கி கொன்றதாக தொழிலாளி கூறினார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற செந்தில்குமார்(வயது 43).டெம்போ டிரைவர். இவருக்கு சங்கீதா (30) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்தனர். சேட்டுக்கு செம்மாண்டப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் பகுதியில் வீடு உள்ளது. இங்கு இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலை அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில்குமார் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு ஓமலூர் பொறுப்பு டி.எஸ்.பி. இளமுருகன், ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் தார் சாலை வரை சென்று ஒரு பிளாட் ரோட்டில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று நின்று கொண்டது. மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செந்தில்குமார் குடிப்பழக்கம், சீட்டாடும் பழக்கம் உள்ளவர் எனவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். கொலையாளியை கைது செய்ய ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கொலை நடந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரும், கிருபாகரனும் நண்பர்கள் என்றும், சம்பவத்தன்று நள்ளிரவு வரை மது குடித்துவிட்டு இதில் ஏற்பட்ட தகராறில் கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து கிருபாகரனை போலீசார் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான கிருபாகரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று நாங்கள் இருவரும் மது வாங்கி நள்ளிரவு வரை குடித்தோம். போதை தலைக்கு ஏறிய பின்பு செந்தில்குமார் என்னிடம் ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்து கல்லால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News