உள்ளூர் செய்திகள்

குளத்தை தூர்வாரிய போது அரிய சிலை கண்டெடுப்பு- 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது

Published On 2022-06-18 10:19 GMT   |   Update On 2022-06-18 10:19 GMT
  • தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர்.
  • சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

தாம்பரம்:

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள திருப்பனந்தாள் ஏரி தூர்வாரும் பணி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர். அப்போது சேறு, சகதியுடன் சேர்த்து விளக்கு போன்ற அரிய பொருள் ஒன்றும் மேலே வந்தது.

தொழிலாளர்கள், அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து பார்த்த போது, அது சுமார் ஒன்றரை அடி உயரத்தில், 5 கிலோ எடை கொண்ட பித்தளை குத்து விளக்கு சிலை என்பது தெரிய வந்தது.

உடனடியாக தொழிலாளர்கள் அதனை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, அந்த குத்து விளக்கு சிலை பம்மல், அண்ணா சாலையில் அமைந்துள்ள சூரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளையர்கள் சூரியம்மன் கோவிலில் சுவர் ஏறிக் குதித்து, இந்த குத்து விளக்கு சிலையை திருடிச் சென்றனர். பின்னர் சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

இந்த அரிய குத்து விளக்கு சிலையை தமிழக அரசின் கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News