சாலை பணி முடிவடைந்து 6 ஆண்டுகளாகியும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- 6 வழி சாலை பணி முடிவடைந்து 6 ஆண்டுகளாகியும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக உள்ள சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் சாலை 6 வழி சாலையாக விரிவு படுத்தும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிவடைந்த நிலையில் ஒரகடம்- சென்னகுப்பம் பகுதியில் சர்வீஸ் சாலை பணி இது நாள் வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்தாலே ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் 6 வழி நெடுஞ்சாலை பணி தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரகடம் சென்னகுப்பம், பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
24 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த 6 வழி சாலையில் பல்வேறு பகுதிகளில் சர்வீஸ் சாலை முடிவு அடைந்த நிலையில் ஒரகடம், சென்னகுப்பம் பகுதியில் மட்டும் ஏன் சர்வீஸ் சாலை பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரகடம் சென்னகுப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.