தென்காசியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் காரை திருடி சென்ற மர்ம நபர்
- வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
தென்காசி:
தென்காசி டி.என்.ஹெச்.பி. காலனியை சேர்ந்தவர் ஜெய்சிங் (வயது 73). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பிளம்பிங் பிட்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஜெய்சிங் தனது மனைவியுடன் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் ஜெய்சிங்கின் வீட்டின் முன்பக்க கேட் திறந்து கிடந்ததால் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெய்சிங் இல்லை. இருப்பினும் முன்பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது. வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஜெய்சிங்கிற்கு தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றதும், பீரோவில் பணம் மற்றும் மதிப்பான பொருட்கள் ஏதும் இல்லாததால் காரை திருடி சென்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தென்காசி போலீசார் காரை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.