உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் இடிந்ததால் கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம்

Published On 2023-10-31 07:09 GMT   |   Update On 2023-10-31 07:09 GMT
  • கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
  • தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி ஆகும். இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வழியாக வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர், கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

மழைக்காலங்களில் இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து செல்லும். அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி மூலம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.

இந்த தடுப்பு சுவர் தரமாக கட்டப்படாததால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு உடைந்து விழுந்து உள்ளது. இதனால் பலத்த மழை பெய்யும் போது இந்த கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு பாய்ந்து செல்லும் தண்ணீர் தாழ்வான பகுதியான உடைந்த கரைகள் வழியாக அத்திப்பட்டு புதுநகர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக அளவீடு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News