முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறை அரசியலை பா.ஜனதா கையாள்கிறது- திருமாவளவன் குற்றச்சாட்டு
- மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
- தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.
அம்பத்தூர்:
அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.
தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.