துறையூரில் பரபரப்பு கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை, தனது வீட்டைக் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜ் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற தோடு, பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 8 1/2 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டின் பின்புறமாக வந்த மர்ம நபர்கள் மூங்கில் குச்சியை பயன்படுத்தி, வீட்டின் மீது ஏறி ஓட்டினை பிரித்து, உள்ளே சென்று வீட்டின் கதவினை உட்புறமாக தாள் போட்டு விட்டு திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வரதராஜ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
துறையூரின் மைய பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.