குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்திருந்தது. இதனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் குளிக்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இருப்பினும் பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர். இரவில் மழை இல்லாததால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் தண்ணீர் சீற்றம் குறைந்ததை அடுத்து இன்று காலை முதல் மீண்டும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது.