கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் 2 பெண்கள் பலி
- புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த அரிசி கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி தாட்சாயணி (48). இவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்கவரப்பட்டில் நடந்து வரும் 100 நாள் வேலைக்கு இன்று காலையில் சென்றனர். மாளிகைமேடு-கடலூர் சாலையில் சென்ற போது, மேல்குமாரமங்கலத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் எதிரில் வந்தது.
இந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களும் கீழே விழுந்தனர். அப்போது கரும்பு லோடு ஏற்றப்பட்டிருந்த டிராக்டர் இவர்கள், 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பெண்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இத்தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். இது அவ்வழியே சென்றவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள், டிராக்டர் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.