எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது- டி.டி.வி. தினகரன்
- பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது.
- நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் 7-ந் தேதி தான் குக்கர் சின்னம் கிடையாது என அறிவித்தது. முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்க அனுமதி வாங்கி இருப்போம். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக குக்கர் சின்னம் தான் எங்களுக்கு கிடைக்கும். இடைத்தேர்தல் என்பதால் கிடைக்கவில்லை அவ்வளவுதான்.
தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக தான் அ.ம.மு.க உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு மாற்றாக தங்களது வாக்கை பதிவு செய்வார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கையில் இரட்டை இலை சின்னம் இருந்தபோது செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. தற்போது அதிகாரம், ஆணவப்போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டது. அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தற்போது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் அணியில் இருப்பவர்கள் உண்மையை உணர்ந்து எங்களுடன் கைகோர்க்கும் நிலை வரும். அடுத்த தேர்தலிலே அது கைகூடும் என எதிர்பார்க்கிறோம்.
பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கடலில் பேனா சிலை தேவைதானா என பலரும் குரல் எழுப்புகின்றனர். ஏன் கருணாநிதி நினைவிடத்திலோ அல்லது அறிவாலயத்திலேயோ தி.மு.க. தனது சொந்த நிதியில் பேனா சிலை வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு மாறாக நிலைமை இருக்கும் போது தான் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதானி பிரச்சனை தற்போது அரசியல் பிரச்சினையாக மாறி உள்ளது. இது குறித்து மத்திய அரசு தான் பதில் கூற வேண்டும். நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை பொது செயலாளர் ரங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.