உள்ளூர் செய்திகள் (District)

வைகை அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு முறைநீர் பாசன தண்ணீர் திறப்பு

Published On 2024-09-14 08:46 GMT   |   Update On 2024-09-14 08:46 GMT
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உள்ளது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று பெரியாறு பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பான 85563 ஏக்கர் விளை நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஒருபோக பாசன பரப்பாகிய 19439 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.29 அடியாக உள்ளது. அணைக்கு 500 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3854 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உள்ளது. 811 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.50 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News