உள்ளூர் செய்திகள்

கருங்குளம், வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு கம்பீர பார்வையுடன் களமாடிய காளைகள்- மிரட்டிய மாடுகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

Published On 2023-01-29 09:22 GMT   |   Update On 2023-01-29 09:22 GMT
  • ஜல்லிக்கட்டில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
  • ஜல்லிக்கட்டு போட்டிகளை காண சுமார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில்காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

அப்போது திடகாத்திரமாக கம்பீரப்பார்வையோடு வெளியே வந்த காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் பந்தாடியது. இருப்பினும் அருகில் நெருங்கிய வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதுமட்டுமின்றி அரட்டி மிரட்டிய காளைகளையும் வீரர்கள் மல்லுக்கட்டி திமிலை இறுகப்பற்றி அணைத்து வெற்றி பெற்றனர்.

இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பிரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், கிப்ட் பாக்ஸ் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் கண்டுள்ளனர். போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர். சுமார் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் என மூன்று சுற்றுகளாக பங்கேற்று வருகின்றனர். வீரர்கள் மற்றும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு உறுதிமொழி ஏற்ற பிறகு போட்டியில் பங்கேற்க வருவாய்த்துறை அனுமதித்தனர்.

அனுமதிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வெளியே வந்த காட்சி ஜல்லிக்கட்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் லாவகமாக அடக்கி தங்களது திறமையை வெளிக்காட்டினர். அதேபோல் காளைகளும் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் களமாடியது.

போட்டியில் வென்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, ரூ.5000 ரொக்கபரிசு, அண்டா, பீரோ, கட்டில் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண சுமார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News