காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு தக்காளி வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
- ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.
இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.