உள்ளூர் செய்திகள்

கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்: பெண் துணை சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

Published On 2023-09-01 04:08 GMT   |   Update On 2023-09-01 04:08 GMT
  • சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.

விருத்தாசலம்:

கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை சாா்பதிவாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார்.

இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும், அதனை 'ஜி-பே', 'போன்-பே ' மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு விருத்தாசலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் இரவு வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுமனை விற்பனை நிறுவனத்தில் 10 மனைகள் வாங்குவதற்கு ரூ.45 லட்சம் முன்தொகை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அவர் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகளும் சிக்கியது.

இதையடுத்து சங்கீதாவையும், அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

நள்ளிரவு 1 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர்களை கடலூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News