பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150-வது நாளாக நீடிப்பு
- விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 150-வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
150-வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.