உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை குடியிருப்பாளர்கள் பராமரிக்க அழைப்பு- தன்னார்வலர்கள் எதிர்ப்பு

Published On 2022-07-10 07:57 GMT   |   Update On 2022-07-10 07:57 GMT
  • பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
  • பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பொழுது போக்கு, உடற் பயிற்சிக்காக சுமார் 56 பூங்காக்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இன்றியும், தண்ணீர் வசதி, மின் விளக்கு, கழிவறை வசதி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளன. இதனால் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை சீரமைக்க அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் தனி நபர்கள் முன்வர வேண்டும் என்று மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறும்போது, "இந்த பூங்காக்களை பொது மக்களிடம் ஒப்படைத்தால் முறையாக திறந்து மூடப்படும். மேலும் பூங்காக்களும் சரியாக பராமரிக்கப்படும்.

அதன் உள்கட்டமைப்புகளை சரி செய்ய அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அவர்கள் கண்காணிப்பு பணிகளையும், செடிகளை வெட்டியும் பராமரித்து கொள்ளலாம். துப்புரவு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். ஏற்கனவே 4 பூங்காக்கள் குடியிருப்பாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கூறும்போது, பூங்காக்களை அரசு நிதியில் தான் பராமரிக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகராட்சி போன்று டெண்டர் விடலாம். மோசமான பராமரிப்பில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

பூங்காக்களை பொது மக்களை பராமரிக்க செய்யும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதன் பொறுப்புகளைக் கைகழுவும் நோக்கத்தில் உள்ளது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் முன்னேற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

Tags:    

Similar News