உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3.32 கோடி பறிமுதல்
- உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 21 லட்சத்து 57 ஆயிரத்து 955 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 96 ஆயிரத்து 858 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.