உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் வீடுகள் முன்பு தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

Published On 2023-10-18 11:05 GMT   |   Update On 2023-10-18 11:05 GMT
  • தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாவிட்டாலும் விட்டு விட்டு பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஹரே ராம் நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பெண்கள் அதில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பலத்த மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது சிறிய மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தேங்கிய தண்ணீரில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News