ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வீடுகள் முன் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
- சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இன்றைய தினம் நாகரை கடவுளாக வழிபடும் கோவில்களிலும் காலையில் பால், மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
களக்காடு:
ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார்.
எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆடி மாதம் விவசாய நிலங்களில் விதைக்கப்பட்ட பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கும் சூழலில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் விளை நிலங்களில் அதிகம் காணப்படும் சூழலில் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என பிராத்தனை மேற்கொண்டும் ஆவணி மாத வழிபாடு நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் நாகரை கடவுளாக வழிபடும் கோவில்களிலும் காலையில் பால், மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் வீடுகளுக்கு முன்பு பொங்கலிட்டு சூரிய பகவானை பெண்கள் வழிபாடு நடத்தினர்.
இதற்காக அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து வீடுகள் முன்பு விளக்கு வைத்து தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை படையலிட்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.