திருப்பத்தூர் அருகே வாத்து, கோழி தகராறில் வாலிபர் கொலை: கூடை பின்னும் தொழிலாளி கைது
- சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார்.
- வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ஜமுனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார். இதே போல் வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.
வாத்துகள் வெங்கடேசன் வளர்க்கும் கோழிகளை கொத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சிலம்பரசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கோழி, வாத்துகள் சம்பந்தமாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சிலம்பரசன் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாத்து, கோழி தகராறில் நடந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.