உள்ளூர் செய்திகள்

மலைகிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்து தொழிலாளி மரணம்

Published On 2023-07-20 03:55 GMT   |   Update On 2023-07-20 03:55 GMT
  • அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
  • அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.

பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News