உள்ளூர் செய்திகள் (District)

மயங்கி விழுந்து தொழிலாளி பலி: டாக்டர்களை கண்டித்து பா.ம.க.வினர் மறியல்

Published On 2024-10-01 08:51 GMT   |   Update On 2024-10-01 08:51 GMT
  • டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,
  • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 35). தொழிலாளி.

இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மணிகண்டன் (17), ரகு (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். ரமேஷ் வழக்கம் போல் நேற்று காலை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், எனவே, ரமேசின் மரணத்துக்கு அங்கிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு ஆஸ்பத்திரியை பா.ம.க. மற்றும் ரமேசின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ரமேஷின் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகர பா.ம.க. சார்பில் விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள தென்கோட்டை வீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.கே.சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரமேசுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்களை கண்டித்தும், டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News