மாதவரத்தில் கழிவுநீர் கால்வாய் பணியில் தொழிலாளி பலி- ஒப்பந்ததாரர்கள் 2 பேர் கைது
- பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய கழிவுநீர் தொட்டி உள்ளே நெல்சன் இறங்கினார்.
- ஒப்பந்ததாரர்களான மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வினீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
கொளத்தூர்:
மாதவரம் அடுத்த முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சரி செய்வதற்காக மாதனங்குப்பத்தில் தங்கி ஒப்பந்த ஊழியர்களாக வேலைபார்த்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த நெல்சன் (26) ரவிக்குமார் ஆகியோர் வந்தனர்.
பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய கழிவுநீர் தொட்டி உள்ளே நெல்சன் இறங்கினார். அங்கே திடீரென விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் கால்வாய் உள்ளே எட்டிப் பார்த்தபோது அவரையும் விஷவாயு தாக்கியது.
அவரும் கால்வாயின் உள்ளே விழுந்தார். தகவல் அறிந்து மாதவரம் தீயணைப்பு அதிகாரி சரவணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நெல்சன் இறந்தார். ரவிக்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர்களான மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வினீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.