ஆவடி போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை முயற்சி
- அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார்.
- சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
திருநின்றவூர்:
ஆவடி, சிந்து நகரில் தனியார் போதை மறுவாழ்வு செயல்பட்டு வருகிறது. இங்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அசோக்குமார் என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்கு வந்தார். அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அசோக்குமாரை அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்படி வலியுறுத்தினர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.
இதற்கிடையே அங்குள்ள சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சிஅடைந்த போதைமறுவாழ்வு மைய அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆவடி போலீசார் போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.