மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
- இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.