மதுராந்தகம் பகுதியில் தொடர்ந்து கைவரிசை- 54 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- விஜயகுமார் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார்.
- கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் மதுராந்தகம், மேல் மருவத்தூர், சித்தாமூர் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சித்தாமூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கோயம்புத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பதும் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 54 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.
ஒரு இடத்தில் பிடிபட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.