உள்ளூர் செய்திகள் (District)

வால்பாறை அருகே காட்டுக்குள் நுழைந்து யானைக்கு உணவளித்த வாலிபர் கைது

Published On 2024-05-19 08:51 GMT   |   Update On 2024-05-19 08:51 GMT
  • வனவிலங்கு மோதல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

வால்பாறை:

தமிழகத்தில் நீண்ட நாளாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மலை பிரதேசங்களுக்கு மக்கள் அதிகமாக சுற்றுலா சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சவுகத் (வயது 45) என்பவர் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்.

வால்பாறையில் சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சோலையார் அணை, மழுக்கபாறை வழியாக காரில் புறப்பட்டு சென்றனர்.

அப்போது ஆனாகாயா வனப்பகுதியில் காட்டு யானை நிற்பது தெரியவந்தது. தொடர்ந்து வாகனத்தை நிறுத்திய சவுகத், அதில் இருந்து இறங்கி, காட்டுக்குள் சென்று யானைக்கு அருகில் பழங்களை வீசி உள்ளார்.

இதனால் மிரண்ட யானை அவரை தாக்க பாய்ந்து வந்தது. யானை வருவதை பார்த்ததும் அவர் அங்கிருந்து காரை நோக்கி வந்து ஏறி கொண்டு அங்கிருந்து சென்றார். யானையிடம் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இதனை அங்கு சுற்றுலா வந்திருந்த யாரோ சிலர் புகைப்படம் எடுத்து கேரளா வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யானைக்கு பழம் கொடுத்ததாக சவுகத் கைது செய்யப்பட்டார். வனவிலங்கு மோதல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே மழுக்க பாறை வனப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை பார்த்தால் வாகனங்களை விட்டு இறங்கவோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News