பொள்ளாச்சி டாப்சிலிப்பில் யானை பாகன் மயங்கி விழுந்து பலி
- யானை பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுகத்தியை சேர்ந்தவர் முரளி (வயது24).
இவர் டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகனாக வேலை பார்த்து வந்தார்.
முரளி, வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பரணி என்ற யானையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் யானையை முகாமுக்குள்ளேயே நடைபயிற்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வது வழக்கம். மேலும் யானைக்கு தேவையான உணவுகளையும் வழங்கி வந்தார்.
நேற்று காலை, வழக்கம்போல முரளி பணிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். திடீரென அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் அவர் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து உறவினர்கள் அவரை தூக்கி கொண்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.