கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சாணிப்பவுடர் குடித்து விட்டு வந்த வாலிபரால் பரபரப்பு
- கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.
- அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
கோவை:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளிப்பது வழக்கம்.
இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி. புதூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது40) என்பதும், அவர் வீட்டில் இருந்து பஸ் ஏறும் போது சாணி பவுடர் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோபாலகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.