- படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெண்டலிகோடு பகுதியில் சென்ற போது கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அனிதா கீழே விழுந்த நிலையில், டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அனிதாவின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் இது போல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் கனரக லாரிகளை தடை செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின் (பொன்மனை), சுகிர் ஜெபராஜ் (வேர்கிளம்பி), ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), பொன் ரவி (திற்பரப்பு) , ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்ல ப்பன், விமலா சுரேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் தாசில்தார் புரந்ந்தரதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் லொரைட்டா, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்கவுதம் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேச்சு வார்த்தையில் கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் தடை செய்யப்படும் என்றும் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்படும், அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியை மூட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று கல்குவாரியை மூடி சீல் வைத்தனர்.