போக்சோவில் ஆசிரியர் கைது: மாணவர்களை 4-ந் தேதியில் இருந்து பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முடிவு ஊர் பஞ்சாயத்தில் முடிவு
- கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.
இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-
போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.