கடலூரில் பயங்கரம்:தனியார் கம்பெனி சூப்பர்வைசரை அடித்துக் கொன்ற வட மாநில தொழிலாளர்கள்- 4 பேர் அதிரடி கைது
கடலூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 43) அதே மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் (32)இவர்கள் 2 பேரும் கடலூர் முதுநகர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் சஞ்சய் குமார் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு 2 பேரும் வேலை முடிந்து சக தொழிலாளர்களுடன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது தொழிற்சாலை பகுதியில் பதுங்கி இருந்த மர்மகும்பல் திடீரென கட்டையால் சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகியாரை சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயங்களுடன் விழுந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் சஞ்சய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.விசாரணையில் இறந்த சஞ்சய் குமாருக்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 4 பேர் கும்பலுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் காரைக்காடு பகுதியில் உள்ள வீட்டில் உள்ள அறை ஒன்றில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சவுத்ரி, ரவீந்தர் சவுத்ரி, சுனில் குமார், சோனு குமார் என்பது தெரியவந்தது. ரசாயன தொழிற்சாலையில் பணி செய்யும் போது சூப்பர்வைசர் சஞ்சய் குமார் இந்த 4 பேருக்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இந்த 4 பேரும் சூப்பர்வைசர் சஞ்சய் குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதனால் சஞ்சய் குமார் இறந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.