உள்ளூர் செய்திகள்

தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் தீ விபத்து: மக்கள் அவதி

Published On 2024-06-27 05:51 GMT   |   Update On 2024-06-27 05:51 GMT
  • மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
  • மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.

தஞ்சாவூர்:

தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.

இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.

மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News