உள்ளூர் செய்திகள்

எடப்பாடியில் இருந்து 8-வது காவடி குழு பழனி பாதயாத்திரை தொடங்கியது

Published On 2024-01-30 09:17 GMT   |   Update On 2024-01-30 09:17 GMT
  • ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
  • தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி:

தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News